search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமான பணிகள்"

    • மறுசீரமைப்பு பணிகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளன.
    • பூமிக்கு அடியில் கம்பிகளை பதித்து, அடித்தளம் போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு ஏற்ப மேம்படுத்துவதற்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 50 வருடங்களில் ரெயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு எழும்பூர் ரெயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணிகள் ரூ.734.91 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன.

    இதற்காக எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. மேலும் அங்கிருந்த மரங்களும் அகற்றப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து அடித்தளம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியது. எழும்பூர் ரெயில் நிலையத்தை ஒட்டி காந்தி இர்வின் சாலை பக்கமும், பூந்தமல்லி சாலை பக்கமும் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் ஆகியவை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றன.

    இந்தப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. காந்தி இர்வின் சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக, அடித்தள கம்பிகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    ரெயில் நிலையத்தை ஒட்டி இருந்த பார்சல் அலுவலகம் இடிக்கப்பட்டுவிட்டது. இங்கு அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க அடித்தள பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்கு 2 தளங்கள் வரை கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடர்பாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளன. எழும்பூர் ரெயில் நிலையத்தில் காந்தி - இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

    இதற்காக பூமிக்கு அடியில் பல அடி ஆழத்துக்கு கம்பிகளை பதித்து, அடித்தளம் போடப்பட்டுள்ளது. பூந்தமல்லி சாலை பக்கத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் வணிக வளாகத்துக்காக, கட்டிடம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர்ந்து விரைவுபடுத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • போலீஸ் அவுட் போஸ்ட், நேர காப்பாளர் அறை ஆகியன அமையவுள்ளது.
    • அனைத்து வளாகங்களிலும் கழிப்பறைகள், குளியல் அறை வசதி அமைக்கப்படவுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் கோவில்வழியில் புதிய பஸ் நிலையம் கட்டப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் 3- வது பஸ் நிலையமாக அமையும் இந்த பஸ் நிலையம் 26 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. திருப்பூருக்கு தாராபுரம் வழியாக வந்து செல்லும் பஸ்கள் இந்த பஸ் நிலையத்தில் வந்து திரும்பும் வகையில் பிரதான வளாகம், தெற்கு, மேற்கு மற்றும் மத்திய வளாகம் ஆகிய பிரிவுகளாக கட்டப்படுகிறது. இதில் மேற்கு வளாகத்தில், 8 பஸ் ரேக்குகள், 15 கடைகள், காத்திருப்பு அறை, போலீஸ் அவுட் போஸ்ட், நேர காப்பாளர் அறை ஆகியன அமையவுள்ளது.

    முதல் தளத்தில் பொருள் பாதுகாப்பு அறை, அறிவிப்பு மையம், கேமரா பதிவு கண்காணிப்பு அறை, நிர்வாக அலுவலகம், ஊழியர் அறை ஆகியன அமையவுள்ளது. தெற்கு வளாகத்தில் 15 பஸ்கள் நிற்கும் வகையிலான ரேக்குகள் மற்றும் 11 கடைகள் அத்துடன் பயணிகள் காத்திருப்பு அறை, ஏ.டி.எம்., அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்டவை அமைகிறது. மேற்கு பகுதியில் அமையும் வளாகம் 5 பஸ் ரேக்குகள் , ஊழியர்கள் அறை மற்றும் சுகாதார பிரிவு அலுவலகம் ஆகியவற்றுடன் கட்டப்படுகிறது. மைய வளாகம் 14 பஸ் ரேக்குகள், 10 கடைகள், நேரக்காப்பாளர் அறை ஆகியவற்றுடன் அமைகிறது.

    மேலும் அனைத்து வளாகங்களிலும் கழிப்பறைகள், குளியல் அறை வசதி அமைக்கப்படவுள்ளது. இவற்றுடன் இரு சக்கர வாகன பார்க்கிங் வளாகமும் இங்கு அமையவுள்ளது. இதையடுத்து பூமி பூஜை நடத்தி பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டது. தற்போது இதில் முதல் கட்டமாக மத்திய வளாகம் கட்டுமானம் பெருமளவு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் பயன்பாட்டில் உள்ள பஸ் நிலையம் செயல்பாடு பாதிக்காத வகையில், ஒவ்வொரு கட்டமாக பணிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. 

    • அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிய வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டது.
    • இதனால் பொதுமக்கள் முன்பை விட தற்போது அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு கழிவுநீர் செல்வதற்கு வாய்க்கால்கள் இருக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிய வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் மழை நீர் மற்றும் கழிவு நீர் புகுந்து பெருமளவில் சேதம் ஏற்பட்டது. இதனால் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடலூர் வில்வ நகர் பகவதி அம்மன் கோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு வந்த நிலையில், இப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காலியாக உள்ள இடங்களில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    மேலும், மழைநீர் வடிகால் வாய்க்கால் வழியாக செல்ல முடியாமல் அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல கடலூர் மாநகராட்சி பகுதியில் புதிதாக வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்பை விட தற்போது அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு செய்து, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வடிகால் வாய்க்காலை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ., கலெக்டர் தொடங்கி வைத்தனர்.
    • ராமேசுவரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் செயல்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் நகராட்சிநிர்வாகம் மூலம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் வளர்ந்து வரும் நகராட்சியாக உள்ளது. பல்வேறு மாவட்ட மக்கள் வந்து செல்லும் பகுதியாக ராமநாதபுரம் உள்ளதால் பெரிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 16909.5 சதுரடி பரப்பில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து ராமேசுவரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் செயல்படும். ஒரு ஆண்டுக்குள் பஸ் நிலைய பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் ராமநாதபுரம் நகர்மன்றதலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 7 சாலைகள் தார் போட்டு முழுமையாக சீரமைப்பதற்காக ரூ.78 லட்சம் ஒதுக்கப்பட்டது.
    • மார்த்தாண்டம் மார்க்கெட் ரூ.14 கோடியே 50 லட்சத்தில் கட்டப்படுகிறது

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சி பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் புதிய குடிநீர் திட்டத்திற்கான பைப் பதிக்கும் பணி நடந்ததை தொடர்ந்து அனைத்து ரோடுகளும் பழுத டைந்து காணப்படு கிறது. நகராட்சி சார்பில் ஒவ்வொரு சாலையும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் குழித்துறை கோர்ட் முதல் பெருந்தெரு வரை, கழுவன்திட்டை சந்திப்பு முதல் இடத்தெரு வரை, பெருந்தெரு முதல் மீன் மார்க்கெட் வரை, பன்னியாணி முதல் வடக்கு தெரு வரை, வார்டு நம்பர் 13 க்கு உட்பட்ட பன்னியாணி சாலை, சிறியக்காட்டுவிளை சானல் சாலை, இடவிளாகம் மிட்ஸ் அலுவலக சாலை ஆகிய 7 சாலைகள் தார் போட்டு முழுமையாக சீரமைப்பதற்காக ரூ.78 லட்சம் ஒதுக்கப்பட்டது.

    இதைப்போல் 6-வது நிதிக்குழு மானியத் திட்டத்தில் 16-ம் வார்டுக்குட்பட்ட சிறிய காட்டுவிளை சாலை, 6-ம் வார்டுக்கு உட்பட்ட மகாதேவர் கோயில் மேட்டு கிராமம் சாலை, 17-ம் வார்டுக்கு உட்பட்ட பன்னியாணி கிளை சாலை, 14-ம் வார்டுக்குட்பட்ட கொல்லங்குளம் வடக்கு தெரு சாலை, 20 ம் வார்டுக்கு உட்பட்ட நந்தன் காடு சாலை, 2ம் வார்டுக்கு உட்பட்ட வள்ளி கோடு அம்பலத்துவிளை சாலை, 6ம் வார்டுக்கு உட்பட்ட அம்மன் கோயில் சாலை, 11 ஆம் வார்டுக்கு உட்பட்ட கண்ணக்கோடு சாலை ஆகிய 8 ரோடுகள் சிமெண்ட் போட்டு சீரமைப்பதற்கு ரூ.68 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    இந்தத் திட்டப் பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மார்த்தாண்டம் மார்க்கெட் ரூ.14 கோடியே 50 லட்சத்தில் கட்டப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மார்த்தாண்டம் பகுதியின் முக்கியமான மைய பகுதி யில்அமைய உள்ளதால் மக்களுக்கு நல்ல முறையில் பயன்படும் விதத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அழகான நிலையில் வசதியாக அமைக்கப்பட உள்ளது. அனுபவம் வாய்ந்த கட்டடக்கலை பொறியாளர்கள் மூலம் வரைபடம் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் வணிக வளாகம், வாகன நிறுத்தம், கடைகள் போன்றவை இடம்பெறு கிறது. இதற்கான பணி 2 மாதத்தில் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன். ஆசைத்தம்பி, ஆணையாளர் ராமதிலகம், நகராட்சி வழக்கறிஞர் ஷாஜி குமார், கவுன்சிலர்கள் மெர்லின் தீபா, அருள்ராஜ், விஜு, ஆட்லின்கெனில், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.பி.ராஜன், குழித்துறை நகர திமுக செயலாளர் வினு குமார், குழித்துறை நகர திமுக.இளைஞரணி அமைப்பாளர் ஆசாத் அலி, திமுக நிர்வாகிகள் ஷாஜி லால், ஜீவகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • மாநிலம் முழுவதும் எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு கட்டுமான தொழில் முழுமையாக ஸ்தம்பித்து விட்டது.
    • கட்டுமான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் 2500 கல்குவாரிகளும், 3 ஆயிரம் கிரஷர்களும் செயல்பட்டு வந்தன. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ரோடுகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளுக்கும் கனிம வளத் தொழில் மூலம் கிடைக்கும் ஜல்லி கற்கள் அடிப்படை ஆதாரமாகவும் அத்தியாவசிய தேவையானதாகவும் உள்ளது.

    தற்போது பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை சிறிய மிரைல் என்றழைக்கப்படும் கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ளது. அதனால் ஏற்கனவே தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.

    இது ஒருபுறம் இருக்க, சமூக விரோதிகள் சிலர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் அச்சுறுத்துவதாகவும், கனிம வளக் கடத்தல், கனிம வளக் கொள்ளை என தகவல் பரப்புவதால் குவாரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் குவாரிகளில் பல்வேறு குறைகளை கண்டறிந்து பல கோடி ரூபாய் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கல்குவாரி. கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை கடந்த 26-ந் தேதி முதல் தொடங்கினார்கள்

    இதன் காரணமாக 2 ஆயிரத்து 500 கல் குவாரிகள், 3 ஆயிரம் கிரஷர்கள் இயங்கவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு கட்டுமான தொழில் முழுமையாக ஸ்தம்பித்து விட்டது. சென்னையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கனிம வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் கல்குவாரி உரிமையாளர்களிடம் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு தலைவர்கள், லாரி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஆனாலும் இந்த விஷயத்தில் அரசு இன்னும் இணக்கமான முடிவை அறிவிக்காததால் போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது. குவாரிகள் மட்டுமின்றி கட்டுமான தொழில்கள் அனைத்தும் முடங்கி உள்ளதால் இந்த விஷயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் குவாரி அதிபர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் 35 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.
    • குடியிருப்பு ஒன்றுக்கு தற்போது 1.66 லட்சம் ரூபாய் என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    பல்லடத்தை அடுத்த பெரும்பாளியில் 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் 35 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.கடந்த 2019ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு க்கான கட்டுமான பணிகள் துவங்கின. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவடையவுள்ள சூழலில் பயனாளிகள் யார், எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

    வீட்டு வசதி வாரிய அதிகாரிஒருவர் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் 60 சதவீதம்வரை நிறைவடைந்துள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்க ப்படும். மொத்தமுள்ள 432 குடியிருப்புகளுக்கு, நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஏற்க னவே பெறப்பட்டுள்ளன. குடியிருப்பு ஒன்றுக்கு தற்போது 1.66 லட்சம் ரூபாய் என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வரும் சூழலில் கலெக்டர் உத்தர வின்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

    • இளையான்குடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • இந்தப்பணிகள் கீழ் ரூ.3கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் சிவகங்கை-பரமக்குடி சாலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குநர் திருமலைமான் முடிகாரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து வருகிற மே மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு உயர் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    மேலும் கூடுதல் தலைமை செயலாளர் தன்னிடமிருந்த பிஸ்கட், முந்திரி, உலர் திராட்சை பழங்களை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

    இந்த ஆய்வின் போது மதுரை மண்டல செயற் பொறியாளர் செல்வராஜ், சிவகங்கை மண்டல உதவி செயற்பொறியாளர் ரங்கராஜ், இளையான்குடி பேரூராட்சி திட்ட பொறி யாளர் சந்திரமோகன், செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் வேலைகள் நடந்து வருகிறது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தானில் ரெயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2016-ம் ஆண்டில் ரூ.45கோடி நிதி ஓதுக்கீடு செய்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். பின்னர் மதுரை கோட்ட நெடுஞ்சாலைதுறை கட்டுமான பிரிவு மூலம் பணிகள் தொடங்கியது.

    தொடர்ந்து சர்வீஸ் சாலை நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகளுக்காக பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் காலக்கெடு முடிந்ததால் பாலம் வேலை கள் பாதியிலே நின்று போனது.

    இதன் பின்னர் பாலம் பணிகளை தொடங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு கட்ட போராட்டங் களை நடத்தினர்.

    இதையடுத்து 2020-ம் ஆண்டு தமிழக நெடுஞ் சாலைத்துறை ரூ.17கோடி மதிப்பீட்டில் மறுடெண்டர் விட்டது. அதன்பின் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மேம்பால பணிகள் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. நெடுஞ்லை துறை அதிகாரிகள் முன்னி லையில் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வந்தது.

    இதுபற்றி புகார் எழுந்ததால் அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் பாலம் கட்டும் பணிகளை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மேம்பாலம் மற்றும் அணுகு சாலை பணிகளுக்கு இடையூராக இருந்து வந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள், பேரூராட்சி குடிநீர் குழாய் உள்ளிட்ட வைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய ஆலோசனைகள் வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் வேலைகள் நடந்து வருகிறது. இந்த மாதம் முதல் பாலப்பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. மேலும் பாலம் மேல் பகுதி மற்றும் அணுகுசாலை ஆகிய பகுதிகளில் தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் பிரசன்ன வெங்கடேஷ், கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் சாருமதி ஆகியோர் பார்வையிட்டனர்.

    வரும் மார்ச் மாதம் பாலம் வேலைகள் முடிந்து அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • குடியாத்தம்-சித்தூர் சாலை, பரதராமி-பனமடங்கி சாலைகளை பார்வையிட்டார்
    • அதிகாரிகள் உடன் இருந்தனர்

    குடியாத்தம்:

    வேலூர் கோட்டம் குடியாத்தம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக நடைபெற்று வரும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை திருவண்ணாமலை வட்ட கண்காணிப்பு பொறியாளர் நெடுஞ்சாலைகள் மற்றும் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை எஸ்.பழனிவேல் ஆய்வு செய்தார்.

    பின்னர் குடியாத்தம்-சித்தூர் சாலை, பரதராமி-பனமடங்கி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகளையும் பொறியாளர் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை வேலூர் கோட்ட பொறியாளர் ஆர்.என். தனசேகரன், குடியாத்தம் உதவி கோட்ட பொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார், வேலூர் தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் கே.ரவிச்சந்திரன்உதவி பொறியாளர் ப.யோகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அசனார் நகரில் பம்ப் அறை கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு பேரூராட்சி பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவில் மின் மோட்டார் இணைப்புடன் கூடிய புதிய பம்ப் அறை கட்டி சின்டெக்ஸ் டேங்க் அமைக்கவும், அசனார் நகரில் பம்ப் அறை கட்டுவதற்கும், அரசங்குளம் வார்டில் சுடுகாடு பகுதியில் புதிய கொட்டகை அமைப்பதற்கும் பூமி பூஜை நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னப்பாண்டியன், வழக்கறிஞர் மாரியப்பன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் நயினார் பாண்டியன், வெயிலாட்சி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலைஞர் நூலக கட்டுமானபணிகள் வருகிற டிசம்பருக்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • மதுரையில் திறக்கப்படும் கலைஞர் நூலகம் தென் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.

    மதுரை

    சென்னையில் ஆசியாவில் 2-வது பெரிய நூலகம் என்ற பெருமையை பெற்றது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். இதனை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2010-ம் ஆண்டு திறந்து வைத்தார்.

    இந்த நூலகத்தை போல தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் 3- ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கலைஞர் நூலக கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதற்காக 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.

    மதுரை புது நத்தம், ரோட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 2 லட்சம் சதுரடி பரப்பளவில் இந்த பிரம்மாண்ட நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இரவு, பகலாக பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் நூலக கட்டிடம் 90 சதவீத பணிக்கு மேல் நிறைவடைந்துள்ளது. சுமார் 7 தளங்கள் கொண்ட இந்த நூலகத்தில் 3 மாடிகள் உயரத்திற்கு அதன் முகப்பில் கண்ணாடி முகப்பு ஏற்படுத்தப்படுகிறது.

    இது தவிர நூலகத்தில் டிஜிட்டல் திரைகள், சிற்றுண்டி கூடங்கள், 100 கார்கள், 200 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடங்கள் அமைகிறது. 3 இடங்களில் எஸ்கலேட்டர்கள் (நகர்வு படிகள்) அமைக்கப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் செல்ல தனி பாதைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கலைஞர் நூலக கட்டுமானபணிகள் வருகிற டிசம்பருக்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரையில் கலைஞர் நூலகம் ஜனவரி மாதம் திறக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    நூலகத்திற்கு தேவையான தமிழ் மொழி, ஆங்கில நூல்கள், குழந்தைகளுக்கான நூல்கள், கணிதம், கணினி அறிவியல், பொறியியல், பொருளாதாரம், பொது நிர்வாகம், மருத்துவம், இலக்கியம், சுயசரிதை, தொடர்பான 12 ஆயிரம் அரிய நூல்கள்உள்ளிட்ட2.50 லட்சம் புத்தகங்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் போட்டி தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தேவையான புத்தகங்களும் கலைஞர் நூலகத்தில் வைக்கப்படுகிறது.

    மதுரையில் திறக்கப்படும் கலைஞர் நூலகம் தென் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.

    ×